முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் அறிமுகம் செய்துள்ள வயதுக்கட்டுப்பாட்டு யோசனை தொடர்பில் இன்று(21) நடைபெறவுள்ள அமைச்சரவையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் 12 லட்சம் பேர் தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள முச்சக்கர வண்டித் தொழிலில், அதன் சாரதிகளுக்கு வயதுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறலாக அமைந்துவிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகளாவதற்கு 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற போக்குவரத்து அமைச்சின் புதிய யோசனை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளை கண்காணிப்பதற்கு விசேடமான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் உள்ள ஒரு பிரஜைக்கு தனக்கு விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.