ஏழு பேரின் விடுதலைக்கு ஆதரவளியுங்கள்!- உலகத் தமிழர்களிடம் சத்யராஜ் கோரிக்கை
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.
முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ்.
வேலூர் சிறையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணி பற்றி, வீடியோப் பதிவு ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ்,
25 வருடங்களுக்கு முன்னாடி இதே ஜூன் 11 ம் தேதி, பேரறிவாளன் என்ற 19 வயசுப் பையனை, விசாரிச்சுட்டு அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லி போலீஸார் அழைத்துப் போனார்கள்.
அவருடைய அப்பா குயில்தாசனும் அம்மா அற்புதம் அம்மாளும், ‘ விசாரிக்கத்தானே கூப்பிடுகிறார்கள்.போய்ட்டு வாப்பா என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
அப்போது போனவர்தான், 25 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.
இந்த வழக்குகைப் பற்றி நாம் பேசலாம். பேசாமலும் இருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் 25 வருடங்கள் என்பது தேவைக்கு அதிகமான தண்டனையாகத்தான் பார்க்க வேண்டும்.
பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோர் 25 வருடங்களாக சிறைவாழ்க்கையின் கொடுமைகளை அனுபவித்துவிட்டார்கள்.
இந்தக் காலத்தில் நளினி, தனது தந்தை இறந்து போனதற்காக ஒருமுறை பரோலில் வெளியில் வந்தார்.
ரவிச்சந்திரனும் ஒருமுறை பரோலில் வந்திருக்கிறார்.
மற்றவர்கள் யாருக்கும் பரோல் விடுப்பு கிடைக்கவில்லை.
சிறையில் பேரறிவாளனை சந்தித்தவர்கள் என்னிடம் சொல்வார்கள், கால்முட்டியில் அவருக்கு பாதிப்பு உள்ளது. உடல்ரீதியாக மிகப் பெரிய அவஸ்தையை அனுபவித்து வருகிறார் என்று.
இன்றைக்கு அவருக்கு 43 வயது ஆகிவிட்டது. உடல் உபாதைகளில் இருந்து சீக்கிரம் குணமாக வேண்டும் என்று யாராவது சொன்னால், மருத்துவ பரிசோதனையின் போதாவது வெளி உலகத்தைப் பார்க்கிறேன். உடல் குணமாகாமல் இருப்பதே நல்லது என வேதனைப்படுகிறார்.
அவருடைய தங்கை திருமணத்திற்கும் அவர் வெளியில் வரவில்லை.
அவரது அப்பா குயில்தாசன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்.
உலகத் தமிழர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதில் என்ன அரசியல் என்று பார்க்காமல், ஆதாயம் பார்க்காமல், சரி தவறு பார்க்காமல், மனிதாபிமான முறையில் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டப் பேரவையில், ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானமே நிறைவேற்றி விட்டார்.
முதல்வர் அம்மா பின்னால் நாம் அணிதிரண்டு நின்று, ஏழு பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கைக்கு துணை நிற்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் மனிதாபிமானத்தோடு இந்தப் பேரணியில் பங்கெடுக்க வேண்டும்.
ஜூன் 11-ம் தேதி, வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை கோரிக்கை பேரணி நடக்க இருக்கிறது.
அந்தப் பேரணி தலைமைச் செயலகம் வந்து சேரும் போது, மாலை 4 மணி ஆகிவிடும்.
அதன்பின்னர் கோரிக்கை மனுவை மாண்புமிகு முதல்வரிடம் கொடுக்க இருக்கிறார் அற்புதம் அம்மாள்.
ஏழு பேரின் விடுதலையை எதிர்நோக்கிய இந்தப் பேரணிக்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் என உருக்கமாகப் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.