நாவற்குழியில் குடியிருக்கும் தமிழ் மக்களை அச்சுறுத்துவதாக முறைப்பாடு!
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தில் 30 ஏக்கர் நிலத்தில் 200 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் போர் காரணமாக வீடுகள் அழிக்கப்பட்டன.
மீண்டும் மீதமாக இருந்த 60 ஏக்கர்நிலத்தில், 30 ஏக்கர் நிலத்தில் மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது மீதமாக உள்ள 30 ஏக்கர் நிலத்தில் காணி இல்லாத வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 17 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்ந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் குறித்த நிலத்தில் ஒரு பகுதி சிங்கள குடியேற்றத்திற்காகவும், மற்றொரு பகுதி இராணுவத்தினருக்கான குடியிருப்பு அமைப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்படி நிலத்திற்கு உரிமை கொண்டாடி வரும் படையினர் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு ஒன்றை நிறுவ முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த நிலத்தில் வாழ் ந்து வந்த 17 குடும்பங்களை சேர்ந்த மக்களை படையினர் கட்டாயமாக வெளியேற்றிருக்கின்றனர்.
இது குறித்து மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் காணி இல்லாமையினால் நாங்கள் இந்த இடத்தில் குடியேறினோம்.
சிலர் அண்மையில் வந்து இங்கே குடியேறினாலும் கடந்த 1991ம் ஆண்டு தொடக்கம் இந்த இடத்தில் வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் படையினர் இங்கே இருக்க முடியாது. வீடுகளை அகற்றுங்கள் என கூறி வெளியேற்றி விட்டார்கள்.
இந்த விடயத்தை நாங்கள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மகளிர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் பேசியிருக்கின்றோம்.
மேலும் இந்த விடயத்தை நாங்கள் படையினருக்கு கூறி நாங்கள் அவர்களுடன் கேட்டு செய்கிறோம் என கேட்ட போதும் எங்களுக்கு படையினர் அவகாசம் தரவில்லை என மக்கள் கூ றுகின்றனர்.
இந்நிலையில் மேற்படி பகுதியில் ஒரு குடும்பம் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றது. அவர்களை வீட்டுக்கு கூரை போட கூடாது என படையினர் தடுத்திருக்கும் நிலையில் அவர்கள் வெறும் கட்டிடத்திற்குள் ஒரு மூலையில் தறப்பாள்களை போட்டு அதற்குள் குடியிருக்கின்றார்கள்.
மேலும் அந்த இடத்தை விட்டுவெளியேறினால் தமக்கு வேறு இடம் இல்லை எனவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த மாதம் 9ம் திகதி தனது செயலாளர் ஊடாக தேசிய வீடமைப்பு அதிகார சபை, யாழ்.மாவட்ட வீடமைப்பு செயலகம், சாவகச்சேரி பிரதேச செயலர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக யாழ்.மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் காணியற்ற மக்களுக்கு வழங்குவதற்கு போதியளவு அரச நிலம் இல்லை.
இந்நிலையில் நாவற்குழி பகுதியில் காணி இல்லாத மக்களுக்கு வழங்குவதற்கும் அந்த மக்கள் குடியிருப்பதற்கும் படையினர் மற்றும் தேசிய வீடமைப்பு திட்ட அதிகாரிகள் பெரும் தடையாக உள்ளது டன், வீடுகளை அழித்தும் கைது செய்து பொலிஸில் ஒப்படைப்போம் என மக்களை அச்சுறுத்துவதாகவும் மக்கள் எமக்கு முறைப்பாடுகளை செய்திருக்கின்றார்கள்.
எனவே அந்தப் பகுதியில் காணிகள் இருப்பின் அதனை அப்பகுதியில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு வழங்கி மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும், வேறு போலியான எந்த நடவடிக்கைகளுக்கும் வழங்க வேண்டாம் எனவும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் கேட்டிருக்கின்றார்.
இந்நிலையிலும் 17 குடும்பங்கள் வாழ்ந்த அந்த இடத்தில் 1 குடும்பம் தவிர மற்றய 16 குடும்பங்களையும் அங்கிருந்து படையினர் மற்றும் வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் வெளியேற்றியிருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.