கடந்த ஜூன் 14ல் துவங்கிய உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இனி உலக கோப்பைக்கு 4 ஆண்டு காத்திருக்க வேண்டும். ரஷ்ய ரசிகர்களோ இனி சொந்த மண்ணில் எப்போது மீண்டும் உலக போட்டிகளை பார்ப்போம் என்ற ஏக்கத்தில் உள்ளனர். ரஷ்ய ரசிகை ஒருவர் கூறுகையில்,‘‘ எங்கள் மண்ணில் நடந்த கால்பந்து போட்டிகளை பார்க்க பலர் வந்தனர். இதனால், பல நண்பர்கள் கிடைத்தனர். தொடர் முடிந்துவிட்டதால் எண்ணற்ற நினைவுகளுடன் ஏக்கத்தில் உள்ளோம்,’’ என்றார்.
‘லீவு’ நீட்டிக்கப்படுமா
உலக கோப்பை தொடரில் பிரான்சின் போக்பா, இங்கிலாந்தின் ரஷ்போர்டு உள்ளிட்டோர் விளையாடினர். இவர்கள் கிளப் அணியில் ரியல் மாட்ரிட் சார்பில் விளையாடி வருகின்றனர். உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், பிரிமியர் லீக் போட்டிக்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளனர். இது குறித்து ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் மவுரின்கோ கூறுகையில்,‘‘ உலக கோப்பை முடிந்த 3 வாரத்திற்குப்பின்தான் (ஆகஸ்ட் 10) பிரிமியர் லீக் தொடர் துவங்குகிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் நட்சத்திர வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்தகுதியையும் தயார் செய்வது அவசியம். முதல் போட்டியில் வேண்டும் என்றால் ஓய்வு தரப்படும். இதன்பின், ஓய்வு நாட்கள் நீட்டிப்பட மாட்டாது,’’ என்றார்.
பாடல் தடை
இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இம்முறை ‘கால்பந்து அணியே தாயகம் திரும்பு’ (புட்பால் கம்மிங் ஹோம்) என்ற பாடல் இங்கிலாந்து ரசிகர்களால் பாடப்பட்டது. ரஷ்யாவில் இங்கிலாந்து அணி 4வது இடம் பிடித்தது. இந்நிலையில், இந்த பாடலை இனி எப்போதும் பாட வேண்டாம் என்கிறார் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரீம் சவுன்ஸ். இது குறித்து இவர் கூறுகையில்,‘‘ இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட், ரஷ்யாவில் அணியின் செயல்பாடு குறித்து தனது கால்பந்து கூட்டமைப்புக்கு அறிக்கை தருவார். ஒருவேளை, சவுத்கேட் இடத்தில் நான் இருந்தால், இனி எந்த தொடரிலும் ‘புட்பால் கம்மிங் ஹோம்’ பாடலை பாடக்கூடாது என அறிக்கை தருவேன். இந்த பாடல், எதிரணிக்குத்தான் ஊக்கம் தருவதாக உள்ளது,’’ என்றார்.