தடகள மன்னன்’ ஜமைக்காவின் உசைன் போல்ட், விரைவில் ஆஸ்திரேலிய உள்ளூர் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
ஜமைக்காவின் முன்னாள் தடகள மன்னன் உசைன் போல்ட், 31. உலகின் ‘மின்னல்’ மனிதன் என்றழைக்கப்பட்ட இவர், 100 மீ., மற்றும் 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
இருப்பினும் கால்பந்து பக்கம் கவனம் செலுத்தினார். இதற்காக ஜெர்மனியின் போருசியா டார்ட்மண்டு, நார்வேயின் ஸ்டிராம்காட்செட் அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது ஆஸ்திரேலியாவின் ‘ஏ–லீக்’ தொடரில் பங்கேற்கும், சென்ட்ரல் கோஸ்ட் மரினர்ஸ் கிளப் அணியுடன், 6 வார பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார். இதனால் வரும் அக்டோபர் மாதம் துவங்கும் ‘ஏ லீக்’ தொடரில் போல்ட் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
மரினர்ஸ் கிளப் அணி தலைமை செயல் அதிகாரி ஷான் மிலேகெம்ப் கூறுகையில்,‘‘ போல்ட் எங்கள் அணியில் இணைய பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அனைத்தும் நன்றாக நடந்தால், இந்த ‘சீசனில்’ கூட, போல்ட் ‘ஏ லீக்’ தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது,’’ என்றார்.