ரஷ்யாவில் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய இளம் வீரரான பிரான்ஸின் கிலியான் மாப்பே, தனக்கு கிடைத்த ரூ.3.5 கோடி பரிசை, தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் சாம்பியனானது. அந்த அணியின் 19 வயதாகும் கிலியான் மாப்பே, மிகச் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார்.மிகவும் இளம் வயதில் உலகக் கோப்பையில் கோலடித்த பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் நெருங்கினார். அதேபோல் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை பைனலில் கோலடித்த இளம் வீரர் என்ற பீலேவின் சாதனையையும் அவர் சமன் செய்தார். இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம் தனக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார் மாப்பே. பிரீமியர்ஸ் டி கோர்டே என்ற அந்த தொண்டு நிறுவனம், காயமடைந்த மற்றும் ஊனமமடைந்த குழந்தைகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. தனக்கு கிடைத்த, ரூ.3.5 கோடி ரூபாயையும் மாப்பே நன்கொடையாக அளித்துள்ளார்.