பரிசோதனை செய்யப்படாத ரத்தம்: 2000 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
இந்தியாவில் பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றியதால் 2,234 நபர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதாரமற்ற முறையிலும், பெறப்பட்ட ரத்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமலும் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுவதாலே அதிக பாதிப்புகள் உருவாகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் அசாமில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த 3 வயது சிறுவன் கவுகாத்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
அப்போது அவனுக்கு பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, நபர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில்அவர்கள் அளித்த பதிலில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதாரமற்ற முறையில் ரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.