உயிருக்கு போராடிய மீன்: அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்கள்
பிரித்தானிய நாட்டில் தங்க நிற மீன் ஒன்றின் கழுத்தில் கட்டி இருந்ததை தொடர்ந்து அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள Buckinghamshire நகரில் ரோய் ஹேண்ட்ஸ்(59) என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் தங்க நிறத்தில் 5 வயதான நீமோ என்ற மீன் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீன் மிகவும் சோர்வுற்று காணப்பட்டதால், அதனை தூக்கிக்கொண்டு 200 மைல்கள் கடந்து பிரிஸ்டோல் நகரில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் காட்டியுள்ளனர்.
மீனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அதன் கழுத்து பகுதியில் கட்டி ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், மீனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றாவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட உரிமையாளர் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், மீனுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
தண்ணீரை விட்டு மீனை வெளியே எடுத்தால் அது இறந்து விடும் என்பதால் மாற்று வழியை பயன்படுத்தியுள்ளனர்.
அதாவது, மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து அதன் வாய் வழியாக காற்றை செலுத்தி கூர்மையாக கவனித்து அறுவை சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் இடையில் திடீரென மீனின் இதயத்துடிப்பு நின்றுள்ளது.
ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்து இதயத்தை மீண்டும் துடிக்க வைத்துள்ளனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற சிகிச்சைக்கு பிறகு, மீனின் கழுத்தில் இருந்த கட்டி வெற்றிக்கரமாக நீக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருந்த அந்த மீன் பின்னர் உரிமையாளரிடம் திரும்ப கொடுக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசமாக வளர்த்த மீனின் அறுவை சிகிச்சைக்காக அதன் உரிமையாளர் 200 பவுண்ட்(43,246 இலங்கை ரூபாய்) செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.