மனித நேய செயலால் மக்களின் பாராட்டைப் பெற்ற கனேடிய பொலிஸ் அதிகாரி
கனேடியப் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊனமுற்ற நபர் ஒருவரோடு பாதையோரத்தில் அமர்ந்து பேசிய சம்பவம் தற்பொழுது பிரபலமடைந்து வரும் நிலையில், அந்த அதிகாரி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கனடாவின் ஹலிபக்ஸ் பிராந்திய நகராட்சியை சேர்ந்த பொலிஸ் அதிகாரியான சோவ்ன் கெர்ரீ என்பவர், தெருவோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரண்டு கால்களையும் இழந்த நபர், அமர்ந்தபடியே கைசக்கரத்தினை பயன்படுத்தி பாதையோரமாக வந்துள்ளார், இதனைப்பார்த்த சோவ்ன், உடனே குறித்த ஊனமுற்ற நபருடன் தரையில் அமர்ந்து கதைத்துள்ளார்.
இதனை சக பொலிஸ அதிகாரி; ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த பலரும், முன்னுதாரணம் மிக்க இந்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டை பாராட்டியுள்ளதுடன், இன்னும் மனித நேயம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோவ்ன் கருத்து தெரிவிக்கும்பொழுது, ‘எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் நன்றாக தெரியும், அவருடன் அமர்ந்து தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருந்தேன். இது எங்களுக்குள் நடந்த ஒரு பொதுவான உரையாடல் தான்’ என்று தெரிவித்திருந்தார்