புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணவில்லை!
புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 700 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த 3 படகுகள் விபத்துக்குள்ளானதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர்.
குறித்த அனைத்து படகுகளும் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த தருனத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த புதன் கிழமை 600 பேருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில், அவர்களில் 100க்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை 550 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்ப்பட்டனர்.
மேலும் 670 பேருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அவர்களில் 25 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் 79 பேர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.