மக்கள் எதிர்கொண்டிருக்கும் வரிச்சுமையைக் குறைக்கும் வகையில் வரிக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கம்பஹா – ரன்வெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசு நினைத்தபடி விதிக்கும் வரிச்சுமையால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே எதிர்காலத்தில் அமையும் தமது ஆட்சியில் தற்போது அமுலில் இருக்கும் வரியிலிருந்து இருபது சதவீதத்ததைக் குறைப்பதாக முன்னாள் அரசதலைவரும் தெரிவித்திருந்தார்.முன்னாள் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கும்போது ஏழாயிரத்து 390 பில்லியன் ரூபாவாக நாட்டின் கடன் இருந்தது. நாட்டின் கடனை மூன்று மடங்கால் அதிகரிக்கும் நிலையை அவர் ஏற்படுத்தியிருந்தார். அதனாலேயே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆதனால்தான் புதிதாக வரி விதிக்க வேண்டி வந்தது. அதனால் மக்கள் அரசின்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தியாக வேண்டும். அதுவும் 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கடன் செலுத்தியாக வேண்டும். இல்லாவிடத்து இளம் தலைமுறையினருக்கு எதிர்காலம் இல்லாது போய்விடும்.
தற்போதுள்ள வரியில் திருத்தம் கொண்டுவந்து வரிச்சுமையைக் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துகின்றபோது அதன் ஒரு வருட காலம் நிறைவடைந்த பின்னர் அது குறித்து பரிசீலனை செய்து திருத்தம் கொண்டுவர வேண்டும் – என்றார்.