ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது மருத்துவர்கள் குறித்த பெண்ணை பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் மூர்ச்சையாகியுள்ளார் இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்கள் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி அறிவித்துள்ளனர்.
பொதுவாக உயிரிழந்த பின்னர் ஒரு மணித்தியாலம் வரையில் நோயாளியின் சடலம் வைத்தியசாலையின் நோயாளர் வார்ட் அறையில் வைக்கப்படுவது வழமையானதாகும்.
இவ்வாறு குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை பெண்ணின் உறவினர் ஒருவர் கண்டுள்ளார்.
பிரேத அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்கள் மற்றும் தாதியரின் பொறுப்பற்ற செயல் குறித்து உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.