முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து , அஞ்சலி நிகழ்வுகள் குறித்து வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார். ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் எடுத்து வருவதாக தெரிய வருகின்றது.
இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.