ஆடுகளத்தில் சுழன்று ஆடும் அசாத்திய திறன் பெற்ற டிவிலியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். ‘மிஸ்டர் 360’ என வர்ணிக்கப்பட்ட இவர், சோர்வு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டிவிலியர்ஸ், 34. கடந்த 2004ல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தார். துவக்கத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய டிவிலியர்ஸ், பின் ‘பேட்டிங்கில்’ அதிரடி காட்டினார். எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த இவர், ‘மிஸ்டர் 360’ என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். இவருக்கு ‘ஏபிடி’, ‘சூப்பர்மேன்’ என்ற செல்லப் பெயர்களும் உண்டு.
கேப்டன் பொறுப்பு
டிவிலியர்சின் சிறப்பான செயல்பாட்டால், டெஸ்ட் (2015–16, 2 போட்டி, ஒரு வெற்றி, ஒரு தோல்வி), ஒருநாள் (2012–2017, 103 போட்டி, 59 வெற்றி, 39 தோல்வி, ஒரு ‘டை’, 4 முடிவு இல்லை), சர்வதேச ‘டுவென்டி–20’ (2012–17, 18 போட்டி, 8 வெற்றி, 9 தோல்வி, ஒரு முடிவு இல்லை) என, மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி, 2015ல் நடந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்றது.
திடீர் ஓய்வு முடிவு
இந்நிலையில் நேற்று, டிவிலியர்ஸ் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறியது: சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் முடிவு திடீரென எடுக்கப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக விளையாடியதில் சோர்வடைந்துவிட்டேன். இது தான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரமாக கருதுகிறேன். இது கடினமான முடிவு என்றாலும், சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓய்வு பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
சமீபத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது மகிழ்ச்சியான தருணம். வெற்றி, தோல்விகளின் போது பயிற்சியாளர்கள், கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவின் நிர்வாகிகள் மற்றும் சக வீரர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினர். இவர்களால் தான் என்னால் போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது. தவிர, தென் ஆப்ரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வழங்கிய ஆதரவு சாதிக்க உதவியது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிவிலியர்ஸ் கூறினார்.