யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலையிலிருந்து மதியம் வரையில் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன், கடும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கமும் காணப்பட்டது. இதனால் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம், சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் மின்ஆளி என்பனவும் சேதமடைந்தது.
இருப்பினும் தெய்வாதீனமாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. சாவகச்சேரி மகளிர் கல்லூரி, நுணாவில், சப்பச்சிமாவடி மற்றும் கீரிமலை பிரதேசங்களே நேற்று மின்னத் தாக்குதலுக்கு இலக்காகின.
சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட கணினி அறை, நூலகம் உள்ளிட்ட வகுப்பறைத் தொகுதிக் கட்டடத்துக்கு தனியாக மின்ஆளி பொருத்தப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் மின்ஆளி தீப்பிடித்து எரிந்தது. ஒரே புகை மண்டலமாக அந்தப் பகுதி காணப்பட்டது.இலங்கை மின்சார சபையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. மின் இணைப்பை அவர்கள் துண்டித்தனர். மின்னல் தாக்குதலால் மாணவிகள் அச்சமடைந்தனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய இராஜ கோபுரத்தின் ஒரு பகுதி மின்னல் தாக்குதலினால் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
108 அடி உயரமான இந்தக் கோபுரம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில், கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கடும் காற்றுக் காரணமாக 7 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.