வளிமண்டலத்தில் குழப்பநிலை தோன்றியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் ஓரிரு நாள்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இதேவேளை, மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என்று கொழும்பு வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பகுதிகளில் நாளை காலை வரையில் மழை தொடர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு நிலமை தொடர்பில் ரி.பிரதீபன் மேலும் தெரிவித்ததாவது,
வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக வடக்குப் பிரதேசங்களில் காலநிலைக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஓரிரு நாள்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.இலங்கையின் தெற்குப் பகுதியில் தென் மேல் பருவக்காற்று காரணமாக மழையின் தாக்கம் உள்ளது. ஆனால் வடக்கினை பொறுத்தவரையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பமே மழைக்கு காரணமாகும். இதனால் ஓரிரு நாள்களுக்கு மட்டும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் – என்றார்.