யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களுக்கான மதிய உணவு வழங்கும் இடத்தில் முட்டைக்கும், இறைச்சிக்கும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் காவலிருந்தனர். அதனால் சீற்றமைடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சீறிப் பாய்ந்தார். அந்த இடம் சிறிது பரபரப்பானது.
அமர்வில் உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்கள் தாமாகவே பரிமாறிக் கொள்ளும் வகையில் (செல்வ் சேவிஸ்) மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவுகளில் முட்டை, இறைச்சி வழங்க இருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அதைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு கோபம் வந்துவிட்டது. “மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?. முட்டை, இறைச்சியை களவெடுத்து விடுவோம் என்றா ஆள்கள் போட்டுள்ளீர்கள்?”-என்று அங்கிருந்த அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்தார். அதனால் அந்த இடத்தில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது.