மெக்சிகோ ஆலையில் வெடிப்பு: மூவர் மரணம், 136 பேர் காயம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த தாகவும் 136 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். மெக்சிகோவின் ஹோட்சா கொல்காஸ் துறைமுக நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பெமக்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. நேற்று அதிகாலை அந்த ஆலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த எண்ணெய் கொள் கலன்கள் வெடித்துச் சிதறின. இதனால் ஆலை முழுவதும் தீப்பற்றிக் கொண்ட தாகவும் அதன் அருகில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையிலும் தீப்பற்றிய தாகவும் அதிகாரிகள் கூறினர். இரு ஆலைகளும் தீப்பற்றி எரிந்ததில் உள்ளே சிக்கியிருந்த ஊழியர்களில் மூவர் உயிரிழந்தனர். 135 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. எண்ணெய் கொள்கலன்கள் மற்றும் ரசாயன ஆலை எரிந்ததால் அதில் இருந்து நச்சுவாயு வெளி யானதைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிய வில்லை.
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தீப்புகை வெளியாவதை குடியிருப்பாளர்கள் பார்த்து பிரமிக்கின்றனர்.