மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்ப்பச்சவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தொடர்புடைய வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆம் திகதி முன்னிலைப்படுத்தியப் போது நீதவான் இன்று அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை பிணை முறி மோசடி தொடர்பில் முக்கிய சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி விற்பனையின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்திருந்தது.
இதனடிப்படையில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.