48 நாள்களாக நடந்த தமிழ் சினிமா ஸ்டிரைக்கிற்குப் பிறகு, முதல் சினிமா நிகழ்ச்சியான ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதைக் கொண்டாட்டமான விழாவாக நடத்தவேண்டும் என்பதற்காக பல சினிமா பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயக்குநர் திரு, கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலலட்சுமி, சூர்யா, ஆர்யா, சதீஷ், விஜி சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர். இப்படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா முதல் முறையாகப் பாடகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். “சிறு வயதிலிருந்தே பாட்டு பாடணும்ங்கிறது கனவு. அதை நனவாக்கி வெச்ச தனஞ்செயன் சாருக்கு நன்றி. இந்தப் பாட்டு எனக்காகவே கம்போஸ் பண்ணமாதிரி இருந்துச்சு. என்னோட குரு எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைச்சதை நினைச்சு ரொம்பவே சந்தோஷப்பட்டார்” என்று முதலில் மேடையேறிப் பேசினார், பிருந்தா.
இதுகுறித்து சூர்யா, “70-களில் பொறந்தவங்களுக்கு மட்டும்தான் சந்திரமௌலியோட அருமை தெரியும். 86-ல ‘மௌன ராகம்’ படம் ரிலீஸ் ஆச்சு. அந்தக் காலத்துல வாழ்ந்தவங்க எல்லாரும் கார்த்திக் சாரைப் பார்த்துதான் காதலிக்கக் கத்துக்கிட்டாங்க. தனஞ்செயன் சார் எங்க குடும்பத்துல நடக்குற முக்கியமான விசேஷங்கள்ல தவறாம கலந்துக்குவார். அவர், என் தங்கை பிருந்தாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.” என்று கூறினார்.