சலீம் படம் தொடங்கி அண்ணாதுரை வரை சொந்தப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவர் தற்போது நடித்துள்ள ‘காளி’ படத்தை விரைவில் வெளியிடத்திட்டமிட்ட நிலையில் அப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை, ‘பிக்சர் பாக்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வாங்கி வெளியிட்டார். ஆனால், படம் ஓடாததினால் அலெக்ஸாண்டருக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது சம்பந்தமாக விஜய் ஆண்டனி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவிடம் அலெக்ஸாண்டர் பேசியபோது, ‘அண்ணாதுரை’ நஷ்டத்துக்குப் பதிலாக ‘காளி’ படத்தின் விநியோக உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
அதன்அடிப்படையில், 50 லட்ச ரூபாயை முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார் அலெக்ஸாண்டர். ஆனால், பாக்கித் தொகையை சொன்ன நேரத்தில் அலெக்ஸாண்டரால் கொடுக்க முடியவில்லை என்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக கடிதம் அனுப்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
‘அண்ணாதுரை’யால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்துவிட்டு ‘காளி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலெக்ஸாண்டர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘காளி’ படத்தை வெளியிடத் தடை விதித்ததோடு, 4 கோடியே 73 லட்சத்தை அலெக்ஸாண்டருக்காக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு ‘காளி’ படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், தடை தொடரும்’ என உத்தரவு பிறப்பித்தனர். அந்த தொகையை விஜய் ஆண்டனி செலுத்தியதால் காளி படத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.
சொந்தப்படம் எடுத்ததால்தான் இப்படி கோர்ட்டுக்கு அலைய வேண்டியதாகிவிட்டது என்று வருந்திய விஜய் ஆண்டணி இனி சொந்தப்படம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.