தமிழ்த் திரையுலகத்தில் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிப்ரவரி 23-க்குப் பிறகு சுமார் 8 வார இடைவெளிக்குப் பிறகு நேற்று தான் படங்கள் வெளியானது. இதனால், சுமார் 40 படங்கள் வரை வெளியீடு தாமதம் ஆகியுள்ளது.
நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமாவில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த ஸ்டிரைக் மூலம் வெளியீட்டு விஷயத்திற்கும் ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. இனி, திரைப்படங்களின் சென்சார் தேதியைப் பொறுத்துதான் படங்களின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சுமார் 40 படங்கள் வரை வெளியிட தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவற்றின் சென்சார் தேதிகளின் வரிசைப்படி படங்களுக்கான தேதியை தயாரிப்பாளர் சங்கம் ஒதுக்கியிருக்கிறது என்கிறார்கள்.
அந்த வரிசையில்தான் ‘காலா’ படமும் ஜுன் 7ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஜுன் 1ம் தேதி ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களுக்கிடையே அடுத்தடுத்து போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.