புத்தாண்டில் தந்தையின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்த அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்து பண உதவி வழங்கியுள்ளார்.பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆளுநரினால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க பிள்ளைகளின் கல்வி செலவிற்காக மாதாந்தோறும் 10 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனமொன்று முன்வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரியிருந்தனர்.
அதற்கமைய ஆனந்தசுதாகரனை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால், ஆனந்தசுதாகரன் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி அப்பாவின் வருகைக்காக காத்திருந்த பிள்ளைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.