பாதீனியச் செடிகள் வளர்ந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் உடனடியாக நடை முறைப்படுத்தப்பட்டன.
பாதீனியம் வளந்துள்ள காணியின் உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடி அதிபதி பி.குமாரரட்ணம் தெரிவித்தார்.
இதற்காக அதிகாரமளிக்கப்பட்டு 144 உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.காணிகளில் பாத்தீனியத்தை அழிக்காமல் வைத்திருப்பவர்களின் நடவடிக்ளை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டு அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு கிளிநொச்சி விவசாய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வின் வளவாளராக கலந்து கொண்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடி அதிபதி பி.குமாரரட்ணம் மேலும் தெரிவித்ததாவது; தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி மனிதருக்கும், மண் வளத்துக்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் பாத்தீனியம் தீங்கு விளைவிக்கும்.
ஆகவே, அதனை வளவுகளில் இல்லாமல் கட்டுபடுத்த வேண்டும். வளவுகளில் இந்தச் செடியை வைத்திருப்பது இனம் காணப்பட்டால் அவற்றை அழிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படல் வேண்டும்.வழங்கப்பட்ட கால எல்லைக்குள் அழிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட நடவடிக்கை தொடர்பான பிரதி எழுத்து மூலமாக உரிமையாளருக்கு வழங்கப்பட்டுக் கையொப்பம் பெறப்படும்.
அதன் பின்னரும் செடியை அழிக்காமல் விட்டால் அதிகாரம் உடைய அதிகாரி தொழிலாளர்களைக் கொண்டு அதனை அழித்து விட்டு வளவு உரிமையாளரிடம் இருந்து அதற்கான பணத்தைப் பெற்று வழங்க முடியும்.இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்காத விடத்து அவர் குற்றவாளியாகக் கருதப்பட்டால், இரண்டு வருட சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .