இந்த ஐ.பி.எல் முழுக்க டாஸ் வெல்லும் அணி தேர்வு செய்தது இரு விஷயங்கள்தான். ஒன்று பவுலிங் இல்லையேல் ஃபீல்டிங். முதல் 15 போட்டிகளிலும், டாஸ் வென்றதும், கேப்டன் என்ன சொல்லப்போகிறார் என யாரும் காத்திருக்கத் தேவையில்லை. But, Ashwin had other ideas. ஆனால், அஷ்வினுக்கு மட்டுமல்ல கெயிலுக்கும் வேறு ஐடியாக்கள் இருந்திருக்கின்றன. #KXIPvsSRH
அஸ்வினின் 200-வது டி20 போட்டி. இந்த ஐ.பி.எல் தொடரில் மொகாலியில் நடக்கும் கடைசிப்போட்டி. மொகாலியில் ஐதராபாத் தோற்றதே இல்லை. மொகாலியில் நடக்கும் போட்டிகளில் 3 அரைசதம் (4 இன்னிங்ஸ்) அடித்து ராசியான கெயில்… போன்ற சுவாரஸ்யங்களுடன் டாஸ் வென்ற அஸ்வின் , பேட்டிங் தேர்வு செய்து முதல் அதிர்ச்சி கொடுத்தார். சென்னையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்ஸியைக்கூட கழட்டாமல், அதே டீமை களமிறக்கினார் அஸ்வின். சன்ரைஸர்ஸ் அணியில் ஸ்டன்லேக்குக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் களமிறங்கினார்.
முதல் 3 ஓவர்களில் பஞ்சாப் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. புவனேஷ்குமார் மீண்டும் ஒரு அட்டகாசமான ஸ்பெல்லை (2 – 0 – 7 – 0) வீசினார். ரஷித் கான் ஓவரில் கெயில் இரு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தினார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 49 ரன்கள் அடித்திருந்தது.