தற்போதுள்ள அரசியல் நிலைமையைக் கருத்தில்கொண்டு அரசைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜிநாமா செய்யவேண்டுமென அரசுக்கு ஆதரவளித்துவரும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமே நேரடி வேண்டுகோளொன்றை முன்வைக்கவுள்ளனர் என்று அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான முக்கியத்துவம் மிக்க சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டரசின் பிரதம அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் சம்பந்தமாகவும், கூட்டாட்சியை தக்கவைத்துக்கொள்வது தொடர்பிலுமே இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் மேற்படி சந்திப்பில் பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளதுடன், இனியும் புறக்கணிப்பு தொடர்ந்தால் காத்திரமானதொரு முடிவை எடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டவுள்ளன என்று அறியமுடிகின்றது.
இதேவேளை, இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் அரசை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் உடனடியாக இராஜிநாமா செய்வது நல்லது என இந்தக் கூட்டத்தின்போது கட்சித் தலைவர்கள் சிலர் ரணிலிடம் நேரடியாகவே வலியுறுத்தவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
எவ்வாறாயினும் நிபந்தனை அடிப்படையிலேயே பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் தெரியவருகின்றது. அதேவேளை, இவ்வாரம் முழுவதும் கொழும்பில் முக்கிய சில அரசியல் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.