இந்திய ராணுவத்திடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 13 ஆம் தேதி சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா என்னும் இடத்தில் ஒரு ராணுவ வாகனம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து பாராளுமன்றத்தில் வினா ஒன்று எழுப்பப் பட்டிருந்தது.இதற்கு உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், “தற்போது மாவோயிஸ்டுகள் ஆழமாக புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க நம் ராணுவத்திடம் போதிய வசதிகள் இல்லை. மேலும் அவர்கள் தங்களது தாக்குதல் வழிமுறைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் முன் கூட்டியே அறிய முடியவில்லை. நமது ராணுவ அதிகாரிகள் இந்த வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் நல்ல பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை மூன்று வெடிகுண்டுகள் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்பு வெடிகளை வெடிக்க ரிமோட் சாதனத்தை உபயோகப் படுத்தி வந்தனர். அதன் பிறகு கண்ணி வெடிகளின் மீது காலை வைத்தால் வெடிக்கும் படி குண்டுகள் தயாரித்தனர். தற்போது நடந்து செல்வோரின் உடை அந்த வெடிகளின் மீது உரசினாலே வெடிக்கும் அளவுக்கு குண்டு தயாரிக்கப்பட்டு புதைக்கப்படுகிறது. அவர்கள் முறைகளை மாற்றுவதைப் போல நமது ராணுவமும் குண்டுகளை கண்டுபிடிக்க பல வழிகளை கையாண்டு வருகிறது.தற்போது அதிக ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டறியும் தொழில் நுட்பத்துக்கான் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இது போல தொழில் நுட்பம் நம்மிடம் இல்லாததால் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் ராணுவ வீரர்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.