தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராகக் கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை அமைச்சர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த முன்னணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுப் பகல் நடைபெற்றது.
இதன்போது தலைமை அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளதுடன், அதைத் தோற்கடிப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டு, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கையொப்பம் திரட்டப்பட்டு அது சபை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், சம்பிக்க ரணவக்க உட்பட முக்கிய உறுப்பினர்கள் தலைமை அமைச்சருக்கு ஆதரவான தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.