இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மத் கான் அப்பாஸுக்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பொருளாதாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான முறையில் கலந்துரையாடவுள்ளனர்.
இன்று இரவு 7.00 மணியளவில் பிரதமர் மாளிகையில் இடம்பெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் இலங்கை பாகிஸ்தான் சிரேஷ்ட அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கை – பாகிஸ்தான் உறவுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பாதுகாப்பு, கல்வி, நிருவாகம், இளைஞர் அபிவிருத்தி என்பன தொடர்பிலேயே இந்த நான்கு உடன்படிக்கைகளும் அமையவுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர நிறுவனத்துக்கும், பாகிஸ்தானின் வெளிவிவகார சேவை நிறுவனத்துக்குமான ஒப்பந்தமும், இலங்கை தேசிய பாதுகாப்புக் கற்கை நெறிகளுக்கான நிறுவனத்துக்கும், இஸ்லாமாபாத்தின் மூலோபாயக் கற்கை நெறிகளுக்குமான நிறுவனத்துக்குமான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளன.
அத்துடன், பாகிஸ்தான் தேசிய பாடசாலை பொதுக் கொள்கை நிறுவனத்துக்கும், இலங்கை நிருவாக அபிவிருத்திக்கான “சிலீடா” நிறுவனத்துக்குமான ஒப்பந்தமும், இலங்கை பாகிஸ்தானுக்கிடையிலான இளைஞர் முன்னேற்றத் திட்டத்துக்கான ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
இவ்வொப்பந்தங்களில், இலங்கை சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க கைச்சாத்திடவுள்ளார். இந்நிகழ்வின் பின்னர் இலங்கை ஜனாதிபதிக்கும் தூதுக்குழுவுக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி இராப் போஷன விருந்து வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.