‘வாடர்ன்னாலே அடிப்போம்’ என்பதுபோல் ‘சென்னைனாலே ஜெயிப்போம்’ என்று சொல்லி அடித்துள்ளது சென்னையின் எஃப்.சி! 5 மாதங்கள் நடந்த ஐ.எஸ்.எல் தொடரின் நான்காவது சீசனின் சாம்பியன்கள் சென்னைதான். அதுவும் இரண்டாவது முறையாக! பலம் வாய்ந்த பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன்னால் இறுதிப் போட்டியில் தூக்கி அடித்து, மீண்டும் கோப்பையைத் தூக்கியுள்ளனர் சூப்பர் மச்சான்ஸ். தொடரின் முதல் வார முடிவில், சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஏனெனில், நிலமை அப்படியிருந்தது. முதல் போட்டியிலேயே படுதோல்வி கண்டிருந்தது சென்னையின் எஃப்.சி. அப்படியிருந்த அணி எப்படி கோப்பையைக் கைப்பற்றியது..?
3 ஆண்டுகள் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த மார்கோ மடராசி, பதவியிலிருந்து விலகிக்கொள்ள, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் க்ரகரி பொறுப்பேற்றார். அணியிலும் நிறைய மாற்றங்கள். ஒருசில இந்திய வீரர்களைத் தவிர்த்து, பெரும்பாலும் புதிய வீரர்கள். ரஃபேல் அகஸ்டோ தவிர, அனைத்து வெளிநாட்டவர்களுமே புதியவர்கள். மற்ற அணிகளைப் போல் இல்லாமல், மார்க்கீ வீரரை ஒப்பந்தம் செய்யாமல் களமிறங்கியது சென்னை. பெயரளவில் நல்ல டீம்தான். ஆனால், அவர்கள் செட் ஆவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. காரணம் கால்பந்தைப் பொறுத்தவரை, வீரர்களின் A to Z பயிற்சியாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதேபோல், பயிற்சியாளரின் தேவைக்கேற்ப வீரர்கள் தங்களின் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். வீரர்களுக்கு இடையிலான புரிதலும் பெர்ஃபெக்டாக இருக்கவேண்டும்.
சென்னை அணியின் முதல் போட்டியில் இவற்றுள் எதுவுமே சரியாக இல்லை. பிரீமியர் லீக் போன்ற மிகப்பெரிய தொடரில், ஆஸ்டன் வில்லா (Aston Villa) போன்ற மிகப்பெரிய அணியின் மேனேஜராக இருந்தவர் க்ரகரி. அங்கு அவர் 3 டிஃபண்டர்கள் உள்ளடக்கிய ஃபார்மேஷனைக் கடைபிடித்துவந்தார். ஆனால், இந்திய கால்பந்துக்கு அந்த ஃபார்மேஷன் அந்நியம். நம் இந்திய வீரர்களும், இதற்கு முன் ஐ.எஸ்.எல் தொடரில் ஆடிய வீரர்களும் அந்த ஃபார்மேஷனில் ஆடியதில்லை. ஆனால், அவற்றை யோசிக்காமல், அதைக் கடைபிடித்தார் க்ரகரி. கோவாவுக்கு எதிரான முதல் போட்டியில், முதல் 38 நிமிடங்களிலேயே 3 கோல்கள் வாங்கியது சென்னை. அந்த அளவுக்கு அணியினரின் கெமிஸ்ட்ரி, பயிற்சியாளரின் திட்டங்கள் அனைத்துமே மோசமாக இருந்தது. ‘சென்னை அவ்வளவுதான்’ என்று ரசிகர்கள் நினைத்தனர்.