பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டுவருவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 42 பேரில் 35 பேர் கையொப்பமிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் 51 பேர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், துமிந்த திசாநாயக்க, சரத் அமுனுகம உள்ளிட்ட 7 அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானமொன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிடவேண்டுமாயின் அவர்கள், அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என பிரதியமைச்சர் ஜே.சீ. அலவதுவள தெரிவித்துள்ளார்.