ஐ.பி.எல்., தொடர் துவங்க உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நரைன் ‘பவுலிங்’ புகாரில் சிக்கி உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், 29. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நிர்ணயித்த, அளவுக்கு அதிகமாக முழங்கையை வளைத்து பந்துவீசிய புகாரில் அடிக்கடி சிக்குவார். இதனால், 2014, 15ம் ஆண்டில் சில மாதங்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். தற்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் லாகூர் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், சார்ஜாவில் குயட்டா அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசினார். இப்போட்டிக்குப்பின், ஐ.சி.சி., நிர்ணயித்த அளவுக்கு அதிமாக முழங்கையை பந்துவீசியதாக நரைன் மீது அம்பயர்கள் புகார் கூறினர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இவரை எச்சரிக்கும் வீரர்களுக்கான பட்டியலில் சேர்த்துள்ளது. தொடர்ந்து, பவுலிங் செய்ய அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் போட்டியில், மீண்டும் இதே புகாரில் சிக்கினால், நரைனுக்கு பவுலிங் செய்ய ஐ.சி.சி., தடை விதிக்கலாம். வரும் ஏப்ரல் 7ல் இந்தியாவில் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் துவங்குகிறது. இதில், கோல்கட்டா அணி சார்பில் களமிறங்க உள்ளார். இதனால், பவுலிங் புகாரில் மீண்டும் சிக்காமல் இருப்பது அவசியம்.