சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கக் கூடாது என்றால் இலங்கை யில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பெற நாம் தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கூறினார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் நியாஸ் சீனி முகமத்.
வடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமர்வு நேற்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அதில் கண்டி வன்முறைகள் தொடர்பான கவனவீர்ப்பு விடயத்தை முகமத் கொண்டுவந்தார். அப்போது மேற்கண்டவாறு அவர் கூறினார்.
கண்டியில் கடந்தவாரம் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவாக உருவாக்க வேண்டும். அரசு வேகமாகச் செயற்பட வேண்டும் என்பதையே உணர்த்தியுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகளாகப் புரையோடியுள்ள இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர நாட்டின் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இந்த அரசாலும் சிறுபான்மை இனத்தின் மத, வியாபார இடங்களைப் பாதுகாக்க முடியவில்லை. ஆனால் நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதே அரசின் கடமையாகும்.
இனவாதிகள் சிலரே கலவரத்தை உருவாக்கியுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் ஏற்பாடாது இருக்க மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். சுயாட்சியைக் கொடுங்கள். நாட்டில் சமஸ்டி முறையான தீர்வுத் திட்டத்தை உருவாக்குங்கள். இதன் ஊடாகவே நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.