அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது, கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார், பிரபல நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்.
2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், டொனால்ட் ட்ரம்ப். இவருக்கும் அமெரிக்காவின் பிரபல நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், அந்தத் தொடர்பை மறைக்க, அதிபர் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப் மீது வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளார்.
இவர்களின் உறவு, 2006-ம் ஆண்டு லேக் டோஹோவில் தொடங்கியது என்றும், 2007-ம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்புடன் நடந்த பல்வேறு சந்திப்புடன் பாலியல் உறவும் நடந்துள்ளதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டவுடன், இந்த உறவுகுறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக, ட்ரம்ப்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் வலுக்கட்டாயமாக ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக 1,30,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.84,50,000) பணம் கொடுத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தில், ஸ்டார்மி டேனியல்ஸ் சார்பில் அவரும், ட்ரம்ப் சார்பில் அவரது வக்கீல் மைக்கேல் கோஹன் மட்டுமே கையெழுத்துப் போட்டுள்ளனர். அதனால், ஒப்பந்தங்களில் முறைப்படி சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் கையெழுத்திட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்துப் போடாததால், ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்குத் தொடுத்துள்ளார்.