பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அருகில் இருக்கும் போதே எமது கடைகள் மற்றும் வீடுகள் மீது இனவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும் இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் முன்வருவதில்லை எனவும் அப்பாவி பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கண்டி மற்றும் திகன பகுதியில் நேற்றிரவு முதல் தற்போது வரை முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்,
பொலிஸ் ஊரடங்கு சட்டம் மற்றும் அவசர கால சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டு பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ள போதும் பெருமளவான இனவாதிகள் வந்து தாக்குதல் நடத்துகின்றார்கள்.இவர்களை தடுப்பதற்கான எந்த சட்ட செயற்பாடுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த எமது அனைத்து சொத்துக்களையும் எரித்து நாசமாக்கி விட்டார்கள்.குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை இன்று வீதியில் நிற்கின்றோம்.
எமக்கு நீதி கிடைக்கும் என சிறிதளவும் நம்பிக்கை இல்லை.
நீண்ட காலமாக காத்திருந்தது போல் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.ஒரு சிலர் செய்த தவறுக்காக ஏனைய அப்பாவி மக்களை தாக்கி அவர்களின் உடமைகளை இல்லாதொழிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.
எமக்கு எதிரான இந்த அநீதிகளுக்கு அல்ஹா தான் பதில் கூற வேண்டும் என தெரிவித்தனர்.