நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல் உடைப்பு என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரனில்விக்ரமசிங்க ஆகியோருக்கு மருதமுனை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.ஹூஸைனுத்தீன் றியாழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது : கடந்த வாரம் அம்பாறையிலும் நேற்று முன்தினம் கண்டி-திகன மற்றும் மடவளை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள பெரும்பாண்மை கமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன் பலர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்கி உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றது.இன்றைய நல்லாட்சியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது நல்லாட்சிக்கு களங்கத்தையும், குந்தகத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தநிலை தொடருமானால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளும்,பிரிவினைகளும் அதிகரித்துச் சென்றுவிடும் இதனால் எதிர்கால சமூகம் பிரிவினையுடன் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகண்டு நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும்,இருப்பையும் உறுதிப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.