தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவும் வடகொரியாவும் ஒரே அணியாக இணைந்து விளையாடியதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே நிலவிவந்த பதற்றம் தணிந்தது, இதனால், தென்கொரியா முயற்சியின் பேரில் வடகொரியா – அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா, மீண்டும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து போர் பயிற்சியைத் தொடங்கவிருப்பது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் கெஞ்சமாட்டோம் என வடகொரியா அறிவித்திருப்பது, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பை மங்கச் செய்துள்ளது.
தென்கொரியாவும் வடகொரியாவும் இணக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே அமைதிச் சூழலை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டை வடகொரியா முன்வைத்துள்ளது.
” ஒருபுறம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டே, மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியிலும் ஈடுபடுவதை வடகொரியா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கான வடகொரியாவின் எதிர்வினைகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அமெரிக்காவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்று வடகொரிய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.