சிரிய நாட்டில் ஏற்பட்டுள்ள போரினால் இடம்பெறும் மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேட்டுள்ளார்.
சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 6 வருடங்களாகப் போர் நடந்து வருகிறது.
தற்போது நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு வட கிழக்கே உள்ள கவுடா எனும் இடத்தில் கடும் போர் இடம்பெற்றுவருகிறது.பெண்கள், குழந்தைகள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர்.
சிரிய அரச படைகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று வருகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்தப் படுகொலையைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் கவனவீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இன்று முல்லைத்தீவில் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதி போரின் போது இனப்படுகொலை நடந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் சிரிய மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முதன்மைச் சந்திக்கு அருகில் இந்தக் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், வவுனியா மாவட்டங்களிலும்கூட இதேபோன்ற போராட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன.
காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாகவும், மாலை 3 மணிக்கு வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.