நடிகை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிர் இழந்தார். அவரின் இறுதிச் சடங்குகளை இந்தியாவில் நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்
ஸ்ரீதேவியின் உடலுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டாகிவிட்டது. அவரின் உடல் அல் குசைஸில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் நேற்றே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்க மேலும் ஒரு கிளியரன்ஸ் சான்று தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த சான்று கிடைத்தால் மட்டுமே ஸ்ரீதேவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.
பிணவறையில் இருக்கும் ஸ்ரீதேவியின் உடல் அந்த கிளியரன்ஸ் சான்று கிடைத்த பிறகு எம்பாமிங் செய்ய முஹைசினாவில் உள்ள எம்பாமிங் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஸ்ரீதேவியின் உடல் இன்றாவது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சனிக்கிழமையில் இருந்து அவரின் உடல் பிணவறையில் உள்ளது.
ஸ்ரீதேவியின் வழக்கை விசாரிக்கும் போலீசார் அவர் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான அறிக்கைகளை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்களாம்.