திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலத்தின் பொலிங்கர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 21-ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தன.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் நேற்று ஆவலுடன் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பரிசு பொருளை பிரித்துப் பார்த்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த பரிசு பொருள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.
இதில் புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மற்றும் அவரது பாட்டி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அருகிலிருந்த மணமகள் ரீமா சாஹூவும் காயமடைந்தார்.
தகவலறிந்து பட்நாகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமண தம்பதிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருளில் மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளை இறந்தது ஒடிசாவில் சோகத்தை ஏற்படுத்தியது.