வாகன பெருக்கம் காரணமாக சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க அதிவேகமாக செல்லும் புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ‘ஹைபர்லூப்’ போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றிடக் குழாய்களுக்குள் ‘ஹைபர்லூப் பாட்’ எனப்படும் ரெயில் பெட்டி போன்ற சாதனங்களை காந்த விசையைக் கொண்டு அதிவேகமாக உந்தித் தள்ளும் நவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
மணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘ஹைபர்லூப் பாட்’ துபாயில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது இதை அறிமுகம் செய்து, அந்த வாகனத்திற்குள் சென்று பார்வையிட்டார். இதில் கோல்டு மற்றும் சில்வர் என இரு வகுப்புகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் பி.எம். டபிள்யூ கார் தயாரிப்பாளர்கள் இருக்கையை வடிவமைத்துள்ளனர். கோல்டு வகுப்பில் ஒரு இருக்கையில் 5 பேர் வீதம் பயணம் செய்ய முடியும். சில்வர் வகுப்பில் ஒரு இருக்கையில் 14 பேர் அமரலாம்.
தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தொடக்கவிழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டிக்கெட் கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும் என ரெயில் திட்டம் மற்றும் வளர்ச்சி அதிகாரி அப்துல் ரெதா அபு அல்ஹசன் தெரிவித்தார்.
துபாயில் இருந்து அபுதாபிக்கு காரில் சென்றடைய 90 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஹைபர்லூப் மூலம் வெறும் 12 நிமிடங்களில் சென்றடைய முடியும். அபிதாபியில் இருந்து புஜைராவுக்கு 17 நிமிடத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.