யாழ்ப்பாணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்றுவிட்ட முறையான சகோதரி ஒருவரை இரண்டு முறை பாலியல் வன்புணர்வு செய்து அப் பெண்ணை தாய்மையடையச் செய்த சகோதரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த வழக்கில் எதிரியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரனது பெயர் குறிப்பிடப்பட்டு சட்டமா அதிபரால் அந்நபருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அவ் வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்படி அந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக குறித்த ஒன்றுவிட்ட சகோதரனே அப் பதினாறு வயதிற்கு குறைந்த தனது சிறியதாயின் மகளை இரண்டு முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை தாய்மையடையச் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்பானது யாழ்.மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி குறித்த நபருக்கு பத்தாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும், கட்டத் தவறின் 2 மாத கடூழிய சிறைத் தண்டனையும் அத்துடன் இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் அதனை கட்டத்தவறின் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.