ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினரும், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சந்திப்பதற்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருடன் சேர்த்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஏழு பேரும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லது எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணி பல்வேறு பிரதேச சபைகளை கைப்பற்றியிருக்கிறது.
இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்குள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், நேற்று சனிக்கிழமை இரவு ஜனாதிபதியை தொடர்புகொண்ட சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டதாக நம்பகரமாக தெரியவருகிறது.