”மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் தூண்களுக்கு மட்டுமே சிறிதளவு சிராய்ப்பு உள்ளது. அங்கே உள்ள ஆயிரம்கால் மண்டபமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபமே இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமே கூறியுள்ள நிலையில் அமைச்சர் அதை ஒரு சாதாரண விஷயம்போல பேசியுள்ளது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
நவீனமயமாக்கபட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கயசேவைப் பிரிவு திறப்பு விழாவில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ”மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் தூண்களுக்கு சிறிதளவு மட்டுமே சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள ஆயிரம்கால் மண்டபம் உட்பட அனைத்துப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. சேதமான பகுதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. துணை முதலமைச்சர் சொன்னதுபோல் ஆறுமாத காலத்துக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும் என்றவர், ”ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைய மாணவர்களுக்கு ஆலோசனை முகாம் நடத்தப்படும்” என்றார்.