யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக வடக்குக் கிழக்கில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த அவர்கள், மைத்திரியின் பிள்ளைகளின் பெறுமதி என்ன என்று அவரால் கூறமுடியுமா? என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 348ஆவது நாளாக நேற்றும் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்கள் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர். அவர்கள் தெரிவித்தாவது-,
இழப்பீடு கோரி நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
நாங்கள் எமது பிள்ளைகளை, கணவனை பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் எங்களுடைய பிள்ளைகள் எங்கும் இல்லை, இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இறுதிப் போரின்போது நாங்கள் ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் ஒப்படைத்த எமது உறவுகளைத் தேடியே நாங்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம். அவர்களின் பிள்ளைகள் காணாமற்போயிருந்தால் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தால் அவர்கள் வாங்குவார்களா?
ஆதாரங்களுடனே இந்த மேடையிலிருந்து போராட்டம் நடத்துகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுலை செய்யப்படுவார்கள் என்று கடந்த ஒருவருடமாகத் தெரிவித்த அரச தலைவர் நேற்று (நேற்றுமுன்தினம்) அபபடி எவரும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இரண்டு வாரங்களில் எமது பிள்ளைகளை விடுதலை செய்வதாகவே ஜனாதிபதி செயலாளர் எமது வீட்டுக்கு வந்து தெரிவித்திருந்தார். தனக்கு அருகிலுள்ள பிள்ளையை விடுதலை செய்ய முடியாத ஜனாதிபதி, காணாமற்போன எல்லோரும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நாங்கள் இழப்பீடு கேட்டா 348 ஆவது நாளாகப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்? எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் வரவேண்டும்.
ஓமந்தை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரிடம் விசாரணை நடத்தவென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கே போனார்கள்? எவ்வாறு அரச தலைவர் இல்லை என்று சொல்லமுடியும்?
மைத்திரியுடன் உள்ள சிறுமி எங்கே?
ஜனாதிபதிடன் காணப்படுகின்ற பிள்ளைக்கு என்ன பதிலைச் சொல்லப்போகின்றார்? இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்?
மைத்திரியின் பிள்ளைகளின் பெறுமதி என்ன?
எங்களுடைய பிள்ளைகளுக்கு ஜனாதிபதி இழப்பீடு தரமுடியுமா?. அவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். மனைவியும் இருக்கின்றார். எமது பிள்ளைகள் இல்லை, இழப்பீடு தருகின்றார்கள் பெற்றுக்கொள்கிறீர்களா என்று ஜனாதிபதின் மனைவி கேட்பாரா? கேட்கமுடியுமா?.
மனைவியின் பதிலைக் கேட்டு அரச தலைவர் தெரிந்துகொள்ளட்டும். பிள்ளையைப் பெற்ற தாய் இழப்பீடா கேட்பாள்?. ஜனாதிபதி தனது பிள்ளைகளுக்கு ஒரு பெறுமதி சொல்வாரா?
ஏமாற்றாதீர்கள்
தயவுசெய்து எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்யவேண்டும். நீங்கள் யாழ்ப்பாணம் சென்றது தேர்தல் பரப்புரைக்கு. ஏன் எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடுகின்றீர்கள்?. எங்களுடைய பிரச்சினையை நாங்கள் அரசியலாக்கவில்லை.
உங்கள் மீது நம்பிக்கை அற்ற நிலையிலேயே நாங்கள் வெளிநாடுகளிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இங்குள்ள தாய்மார்களின் கண்ணீரைப்பார்த்து வெளிநாடுகள் உடனடியாக வந்து இறங்கவேண்டும். எமது பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டும். 9 வருடங்களாக ஏமாற்றினீர்கள், இனியும் ஏமாற்றாதீர்கள்.
மகிந்தவையும் விசாரிக்க வேண்டும்
போர்க் காலத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினரை விசாரிக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவை விசாரணை செய்ய வேண்டும். நீங்களும் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக கடமையாற்றியவரே. நீங்களும் பதிலளிக்கவேண்டும்.
கடும் அழிவையே எதிர்கொள்வீர்கள்
ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபடவுள்ளோம். நீங்களும் அழிவுகளைச் சந்திக்கும்போது தான் உங்களுக்கும் தெரியவரும். இந்த விடயத்தில் வெளிநாடுகள் அமெரிக்கா ஜரோப்பிய ஒன்றியம் உட்பட உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியறுத்துகிறோம் – என்றனர்.