நாம் கூட்டாட்சியை (சமஷ்டி) கைவிட்டோம் என்று கூறிவருகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான், கூட்டாட்சியைக் கைவிட்டு ஒற்றையாட்சிக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 27 வட்டாரங்களில் எந்தவொரு வட்டாரத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்தான் இன்று தூய கரத்தைப் பற்றிப் பேசுகின்றார். தூயகரத்தின் மாநகர முதல்வர் வேட்பாளர்தான், நிதி அமைச்சரா ரவி கருணாநாயக்க இருந்தபோது வாகனத்துக்கு வரிச் சலுகை பெற்றவர்.
இலங்கையின் தேசியக்கொடி உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் இரு தமிழர்களும் 5 சிங்கள உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தார். இந்தக்குழுதான் இப்பொழுது பயன்பாட்டிலுள்ள சிங்கக் கொடியைத் தேர்வு செய்தது. இந்த நடவடிக்கையின் போது ஒரு தமிழர் வெளியியேற்றிருந்தார்.
அவர் வெளியேறிய பின்னர் மற்றொரு தமிழன் அந்தக் குழுவில் இருந்து ஒப்பமிட்டான். சிங்கக் கொடியை ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டது வேறு யாருமல்ல. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தான்.
மக்களின் ஆணைக்கு இணங்க நாம் சரியான பாதையிலேயே பயணித்து வருகின்றோம். தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுதில் கால தாமதம் ஏற்படுவதால் மக்களுக்கு ஏமாற்றம் உள்ளமை உண்மைதான். அது எமக்கும் விளங்குகின்றது. மூன்று ஆண்டாகியும் எதுவும் நடக்கவில்லை என்ற ஏக்கம் மக்களுக்கு இருக்கின்றது.
அதனை நாம் அறிவோம். அதனால்தான் அரசுக்கு பல வழிகளிலும் பன்னாட்டுச் சமூகத்தின் ஊடாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். நாம் வழங்கிய வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற காலதாமதம் ஆகின்றதே தவிர நாம் ஒன்றுமே செய்யவில்லை என்று இங்குள்ளவர்கள் கூறுவது பொய்யானது.
தேர்தல்களில் தமிழ் மக்களுக்கு சரியாக வாக்களிக்கத் தெரியும். அதனை அவர்கள் கடந்த காலங்களில் நிரூபித்தும் இருக்கின்றார்கள். நாம் மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இங்கு உதிரிக் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பைக் குறைத்தால், கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கை குறைகின்றது என்றே வெளிநாடுகள் எண்ணும். எனவே கூட்டமைப்பை மக்கள் அமோக வெற்றியடையச் செய்யவேண்டும் – என்றார்.