“இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவந்த பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:-
“வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், இளவரசருக்கு ஏற்கனவே எடுத்துக் கூறியுள்ளார். அதனை அவர் புரிந்துகொண்டுள்ளார்.
எமது உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சில விடயங்கள் நடந்துள்ளன. இருப்பினும் அது போதாது. விடயங்கள் ஆமை வேகத்தில்தான் நகர்கின்றன. அரசியல் கைதிகள் விவகாரம், காணி விவகாரம் என்பன தொடர்பிலும் அவருக்கு எடுத்துரைத்தேன்.
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் எந்தளவு தூரம் வந்துள்ளன என்பதையும் விளக்கினேன். தற்போது தேர்தல் வந்துள்ளது. அரசியல் நிலைமைகள் மாறக்கூடிய சூழல் இருப்பதையும் கூறினேன். இழுத்தடிக்கப்பட்டமையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்பதையும் அவரிடம் குறிப்பிட்டேன்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் எங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. இந்த ஆண்டும் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கூடுதலான அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வைக் காண்பதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்று கூறினேன்.
அவர்கள் அரச குடும்பம் என்பதால் இந்த விடயங்களில் பொதுவாகத் தலையிடுவதில்லை. பிரிட்டன் அரசு இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் தாங்கள் இணங்கிப்போவதாகக் கூறினார்” – என்றார்.