பரிஸ் 14 இல் மொன்பர்னாஸ் (Montparnasse) பகுதியில் உள்ள உணவகத்திற்குள் சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உடலின் பல பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் சாவடைந்து காணப்பட்டுள்ளார். இவரிற்கு 25 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை, அங்கு பணிக்கு வந்த மற்றொரு ஊழியர் நிலக்கீழ் அறையில் இந்த உடலத்தைக் கண்டதும் காவற்துறையினர்க்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு சென்ற காவற்துறையினர், கொல்லப்பட்டுக் கிடந்த இந்த இளைஞனின் உடலத்தைக் கண்டுள்ளனர். அங்கு பெரும் சண்டை நடந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பாத்திரங்கள் எல்லாம் சிதறிக் கிடந்துள்ளன. அருகில் இன்னொரு உணவக ஊழியரின் ஆடையும் கிடந்துள்ளது.
இந்த இளைஞனைக் கொன்றவரும் இதே உணவகத்தில் பணிபுரிபவர் என்பதை அறிந்த காவற்துறையினர், ரொனி சூபுவா (Rosny-sous-Bois) வில் வசிக்கும் அவரைக் கைது செய்யச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் 34 வயதுடைய கொலையாளி, ஓல்னே-சூபுவாவில் RER-B தொடருந்தின் முன்னால் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரும் சிறீலங்காவைச் சேர்ந்தவரா என்பது குறிப்பிடப்படாவிட்டாலும், இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் சிறீலங்காவைச் சேரந்தவர்களே எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னமும் இந்தக் கொலையும் தற்கொலையும் நடந்ததற்கான காரணங்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை எனவும், தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.