அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வகையில், பிரதான கட்சிகள் பலவும் தமது இறுதிப் பிரச்சாரக் கூட்டங்களை முக்கிய நகர்களில் ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்திலும், அக்குரஸ்ஸையிலும் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு, கிராண்ட்பாஸில் இடம்பெறவுள்ளது. இதுதவிர, அக்கட்சியின் கூட்டங்கள் மாத்தறை, காலி, களுத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதாகவும் இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் பிரதான கூட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருணாகலையிலும், ஹோமாகமையிலும் இடம்பெறவுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான கூட்டம் அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தலைமையில் மஹரகமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.