சீன எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதி சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது.
விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் அத்துமீறலை தடுக்கும் பொருட்டு, இங்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இப்பகுதியில் சீனாவும் அதிகளவில் வீரர்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்பகுதிக்கு சென்று வீரர்களை சந்திக்க பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்தார்.
தோய்சே பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன எல்லையையொட்டி தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்றார்.
இமயமலை பகுதியில், மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்துக்கு சென்ற நிர்மலா சீத்தாராமன் அங்கிருந்த ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது, வீரர்கள் அர்ப்பணிப்பு, செயல் திறன் குறித்து பாராட்டினார்.
அத்துமீறும் சீன ராணுவத்தை எதிர்கொள்வது குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தது தங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாக வீரர்கள் தெரிவித்தனர்.
இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் அங்கு சென்று வீரர்களை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.